பூக்களின் மகரந்தங்கள் போல
உனை ரகசியமாய் என்னில்
பதுக்கிய நாட்களிளெல்லாம்….
மெல்லிய அதிர்வுகளால்
ஒரு பூஞ்சோலையின்
சுகத்தினை வசப்படுத்தி
எனை வசியப்படுத்திவிட்டாய்…
இறுதிவரை இனிக்கும் அமுதமாய்
அடிநாக்கில் தித்தித்தாய்…
உன் ஓவியப் புன்னகையில்
ஒரு குழந்தையின் அழகை
ஒழித்துவைத்துக்கொண்டு
மூர்க்கத்தனமாய் முரண்டுபிடிக்க
எப்படி முடிந்தது உன்னால்….
ஏனென்று தெரிவதற்குள்
நம் காதலை கசக்கிப்பிழிய
அப்படி….
என்னடி நேர்ந்துவிட்டது….
உன்னால் நேசிக்கப்பட்ட
நாட்களைவிடவும் அதிகமாய்
அழுதோய்கிற நாட்களேயதிகம்…
கண்மணி….
சத்தமாய் வீசுகிற காற்று
என் ஊமைப்புண்களில் பட்டு
ரணகளமாக்கிச் செல்கிறதடி…
உனை உயிராய் மதித்த
என் காதலை…
உருத்தெரியாமல் தகர்த்தவளே….
என் ஆன்மாவின் வீதி நெடுகிலும்
வெள்ளைக்கொடிதான்
பரக்கவிட்டிருக்கிறேன்
ஒருமுறை வந்து பாரேன்…